நெய்,ஆடை,மருந்து விலை குறைய போகுது..!

Estimated read time 0 min read

ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடக்கிறது.

விலை குறையும் பொருட்கள் என்னென்ன..?

நெய், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்படும்.

அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன. சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ்கள் ஆகியவை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்படும். எனவே, மேற்கண்ட பொருட்களின் விலை குறையும்.

குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும். ஆனால், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதனால் அவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.

தற்போது பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட முக்கிய உணவு சார்ந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்படுத்தும் சர்க்கரை, தேநீர் போன்ற பொருள்களுக்கு 5 சதவீதம், வெண்ணெய், நெய், கைப்பேசி போன்ற பொருள்களுக்கு 12 சதவீதம், சோப்பு, தேங்காய் எண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற பொருள்களுக்கு 18 சதவீதம், தொலைக்காட்சி, குளிர்பதனப்பெட்டி மற்றும் குளிரூட்டிகள் (ஏ.சி.) போன்ற பொருள்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

இந்த சூழலில் மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12 சதவீத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டுவரும் 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளன. அதேபோல் 28 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author