செப். 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து தி.மு.க.வில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ அணியில் இணைந்துள்ள அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்கும் பொருட்டு சிறப்பு விளக்கக் கூட்டங்கள் நடத்த தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் மண்-மொழி மானம் காக்க கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், கழக மாவட்ட வாரியாக பின்வரும் அட்டவணைப்படி நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.