மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக தெரிவித்தார். ஒடிசா மக்களை வறுமையில் இருந்து மீட்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் எனக் கூறிய பிரதமர் மோடி,
ஒடிசா முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் மாநில மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வருவதாகவும் புகழாரம் சூட்டினார். சூரத் நகருடன் ரயில் மார்க்கமான இணைப்பு ஒடிசாவிற்கு மிக முக்கியமானது என குறிப்பிட்ட அவர், பெர்காம்பூர்- உதானா இடையிலான அம்ருத் பாரத் ரயில் சேவை, குஜராத்தில் வசிக்கும் ஒடிசா மக்களுக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒடிசா மக்களின் வளர்ச்சிக்கு கல்வி முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் என்றும் தெரிவித்த அவர்,
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G தொழில்நுட்பம் மூலம் BSNL நிறுவனம் புதிய அவதாரம் எடுத்துள்ளதாகவும் கூறினார். எலக்ட்ரானிக் CHIP முதல் SHIP வரை அனைத்திலும் இந்தியாவை தன்னிறைவு பெற வைப்பதே மத்திய பாஜக அரசின் இலக்கு எனக்கூறிய பிரதமர் மோடி, ஒடிசாவின் பூர்வகுடி மக்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.