தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 2030ஆம் ஆண்டுக்குள் இடைநிற்றல் இல்லாமல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் பணியாற்றி வருவதாகவும், குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் தொடர்ந்து ஒரு தடையாகவே இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ஆம் ஆண்டு இந்திய அளவில் தொடக்கப்பள்ளிகளில் 0.3 சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் 3.5 சதவீதமும், உயர்நிலைப் பள்ளிகளில் 11.5 சதவீதமும் இடைநிற்றல் விகிதம் இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில், தமிழக தொடக்கப் பள்ளிகளில் 2.7 சதவீதமும், நடுநிலைப் பள்ளியில் 2.8 சதவீதமும், உயர்நிலைப் பள்ளியில் 8.5 சதவீதமும் இடைநிற்றல் விகிதம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இடைநிற்றல் விகிதத்தில் தமிழகம் ஓரளவுக்கு முன்னேற்றம் உள்ளதாகவும், ஆனால், 2023-24ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் ஆண்டில் தமிழக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் ‘பூஜ்ஜியம்’ என்ற நிலையிலும், உயர்நிலை பள்ளிகளில் 7.7 சதவீதம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கேரளா 0.8 சதவீதம், ஆந்திரா 1.4 சதவீதம் பெற்ற நிலையில், கர்நாடகா மற்றும் தெலங்கானா பூஜ்ஜியம் இடைநிற்றல் விகிதங்களை பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
