2025ம் ஆண்டின் உலக இணைய உச்சிமாநாடு நவம்பர் 7ம் நாள் ஜெச்சியாங் மாநிலத்தின் வூ ச்சென் நகரில் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய பரப்புரை துறை அமைச்சருமான லீ ஷு லேய் இத்துவக்க விழாவில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அண்மையில் நிறைவடைந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வில், வரும் 5 ஆண்டுகளில் சீன நவீனமயமாக்க வளர்ச்சியின் இலக்குகளும், இணையத் துறை வளர்ச்சிக்கான ஒரு தொகுதி முன்னேற்பாடுகளும் முன்வைக்கப்பட்டன. அவை உலகின் இணைய வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்று இம்மாநாட்டில் பங்கெடுத்த விருந்தினர்கள் தெரிவித்தனர்.
திறப்பு, ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொது நலன் ஆகிய சிறப்புகள் கொண்ட இணைய பொது சமூகத்தைக் கட்டியெழுப்புவது, நடப்பு உச்சிமாநாட்டின் தலைப்பாகும். எண்ணியல் பொருளாதாரம், பண்பாட்டு மரபுச் செல்வங்களின் எண்ணியல்மயமாக்கப் பாதுகாப்பு முதலிய அம்சங்கள் குறித்து 24 கிளை கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. 130க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1600 விருந்தினர்கள் இவ்வுச்சிமாநாட்டில் பங்கெடுத்து வருகின்றனர்.
படம்:VCG
