தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, 2025-26 கல்வி ஆண்டிற்கான திருத்தப்பட்ட வேலை நாட்கள் மற்றும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, நடப்பு கல்வி ஆண்டின் வேலை நாட்கள் 220-லிருந்து 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 நாட்கள் தொடர் விடுமுறையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய பண்டிகை விடுமுறைகளும் அடங்கும். இந்தத் தொடர் விடுமுறை மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே, காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18 முதல் 26 வரை நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் (செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அரையாண்டுத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை விரைவில் பள்ளிக் கல்வித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
