மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற புதிய வேலைவாய்ப்புத் திட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா மீது பேசிய பாஜக எம்.பி. அஜய் பட், “ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்” என்ற மந்திரத்தை உச்சரித்தால் வேலையில்லாத் திண்டாட்டம், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் விவசாயச் சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்துத் துயரங்களும் நீங்கும் என்று கூறினார்.
மேலும், திருமணம் கைகூடாதது முதல் பசு பால் கொடுக்க மறுப்பது வரை எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ராமர் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அவர் பேசியது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அஜய் பட் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆவார். இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, மன்ரேகா திட்டத்தைப் பலவீனப்படுத்தவே அரசு இப்புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
“‘ஸ்ரீ ராம், ஜெய் ராம்’ என்று சொன்னால் பிரச்னைகள் சரியாகிவிடும்” – நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி பேசியது என்ன?#ParliamentSession #BJP pic.twitter.com/2TZvOxaHW9
— BBC News Tamil (@bbctamil) December 18, 2025
“>
மசோதா நகல்களைக் கிழித்தெறிந்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே அரசு இந்தத் திட்டத்தைத் தெளிவான நோக்கத்துடன் கொண்டு வந்துள்ளதாக அஜய் பட் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
