நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, ஐந்தரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு நட்சத்திரக் கூட்டத்தை படம் எடுத்துள்ளது.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி 1990 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்கள், புதிய புதிய தகவல்களை விஞ்ஞானிகளுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில், தொலைநோக்கி ஐந்தரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் படம் எடுத்து அனுப்பி உள்ளது. இந்த கண்கவர் புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள நாசா, “இந்த ஹப்பிள் கிளாசிக் காட்சி M16-க்குள் உள்ளது, இது ஈகிள் நெபுலா என்றும் அழைக்கப்படுகிறது. கிளஸ்டரின் தீவிரமான புற ஊதா ஒளியானது சுற்றியுள்ள நெபுலாவை ஒளிரச் செய்கிறது.
படத்தில் காணப்படும் இருண்ட திட்டுகள் மிகவும் அடர்த்தியான வாயு மற்றும் தூசியின் பகுதிகள் ஆகும். இது ஒளி கடந்து செல்வதை மறைக்கிறது. குறிப்பாக, வாயு மற்றும் தூசி நிறைந்த இருண்ட பகுதிகள் கீழே இடதுபுறத்தில் காணப்படுகின்றன” என்று பதிவிட்டுள்ளது.