தமிழக அரசியலில் எப்போதுமே ‘கிங் மேக்கராக’ இருக்க நினைக்கும் பாமக, தற்போது தந்தை ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் என இரண்டாக உடைந்து கிடக்கிறது.
அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், ஓரங்கட்டப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், இப்போது திமுக பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி ‘நன்றாக உள்ளது’ என ராமதாஸ் பாராட்டியதுமே, அவர் திமுக கூட்டணிக்கு வரப்போகிறார் என்ற பேச்சு பலமாக எழுந்தது. ஆனால், திமுகவின் ஆதி காலத்து கூட்டாளியான விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இதற்கு ரெட் சிக்னல் காட்டியுள்ளார்.
“சாதியவாத பாமக அல்லது மதவாத பாஜக இடம்பெறும் எந்தவொரு கூட்டணியிலும் விசிக அங்கம் வகிக்காது” என்று அவர் கறாராகத் தெரிவித்துவிட்டார்.
ராமதாஸ் அணிக்கு 3 இடங்களை ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகவும், உதயசூரியன் சின்னத்திலேயே அவர்களைப் போட்டியிட வைக்க நிபந்தனை விதித்திருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
இதனால், ‘பழைய நண்பரா? அல்லது புதிய வரவா?’ என திமுக தலைமை இக்கட்டான சூழலில் உள்ளது. ஒருவேளை திமுகவில் இடம் கிடைக்காவிட்டால், ராமதாஸ் தரப்பு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
