பாகிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை அமெரிக்க அரசு காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி நெருக்கம் காட்டி வந்த நிலையில், இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
கடந்த 2025 மே மாதம் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கமான கூட்டாளிகளாகத் தெரிந்தன.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் இருமுறை அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் மதிய உணவு அருந்தினார்.
ஒருகட்டத்தில், டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அளவுக்கு உறவு நீடித்தது.
ஆனால், “பாகிஸ்தான் பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் மட்டுமே பதிலுக்குத் தருகிறது” என்ற டிரம்பின் பழைய நிலைப்பாடே தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 21 முதல் அமலுக்கு வரும் வகையில், பாகிஸ்தான், வங்கதேசம், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை நிறுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதிச் சுமையாக இருக்கும் என கருதப்படும் விண்ணப்பதாரர்களைக் கொண்ட நாடுகளுக்கு இந்தத் தடை பொருந்தும்.
விண்ணப்பதாரர்களின் வயது, ஆங்கிலப் புலமை, கல்வி மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவை மிகக் கடுமையாக ஆய்வு செய்யப்படும். இந்த 75 நாடுகள் அடங்கிய பட்டியலில் இருந்து இந்தியாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் பார்வையில் இந்தியா ஒரு ‘நம்பகமான கூட்டாளி’ என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பாகிஸ்தானின் நீண்டகால நண்பனான அஜர்பைஜான் மற்றும் புதிய நட்பு நாடான வங்கதேசமும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் இந்த அதிரடி விசா தடையைச் சந்தித்துள்ளன. “அமெரிக்க மக்களின் தாராள மனப்பான்மையை இனி யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது” என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
