நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து இன்று பிரதமர் மோடி தொடங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இன்று பிரதமர் மோடி தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார். 1980ஆம் ஆண்டில் ராமாயணத்தில் ராமனாக நடித்த நடிகர் கோவிலை பாஜக மீரட்டில் களமிறக்கியுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, ராமர் வேடத்தில் நடித்து மிகவும் மதிக்கப்படும் அருண் கோவிலின் தொகுதியில் இருந்து பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
பிரதமரின் பேரணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அனூப் குப்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீரட்டைத் தவிர, அருகிலுள்ள பாக்பத், பிஜ்னோர், முசாபர்நகர் மற்றும் கைரானா மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்களும் பேரணியில் பங்கேற்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் மீரட் பேரணி மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், எம்எல்சியுமான கோவிந்த் நாராயண் சுக்லா கூறியதுடன், மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெறும் என்று உறுதிபடக் கூறினார்.