Web team
ஹைக்கூ தோப்பு !
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி !
நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தாய் வெளியீடு 42/45, இராஜாங்கம் மத்திய வீதி ,
வடபழனி ,சென்னை ,26.
விற்பனை உரிமை நூலாக்கம் .பாரதி புத்தகாலயம் 421,அண்ணா சாலை ,தேனாம் பேட்டை .சென்னை ,18,
விலை 60
ஹைக்கூ கவிதை என்பது வாசகர்களுக்கு கனி போன்றது .ஒரு கனியே இனிக்கும் சுவைக்கும் .இந்த நூல் கனிகளின் தோப்பாக ஹைக்கூ தோப்பாக வந்துள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி அவர்களின் உழைப்பில் உருவான தோப்பு .இந்த தோப்பில் வாசகர்கள் இளைப்பாறலாம் ,இனிய காற்றை சுவாசிக்கலாம் .சிந்திக்கலாம் ,இனிய கருத்துக்களை உணரலாம் .எழுத்தாளர் ச .,தமிழ்செல்வன் அவர்களின் அணிந்துரை மிக நன்று .அட்டைப்படங்கள் உள் புகைப்படங்கள். அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர் பாரதி புத்தகாலயத்தினர் .பாராட்டுக்கள் .
ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழ் மண்ணிற்கேற்ப ஹைக்கூ வடிப்பதில் ஒரு கூட்டம் சிறப்பாக உருவாகி விட்டது .தமிழகத்தில் இலக்கியத்தில் ஒரு தாக்கத்தை ,அதிர்வை ஏற்படுத்தி வருகின்றனர் .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு யுத்தி .வாசகர் நினைத்தது அல்லாமல் வேறு சொல்வதும் ஒரு யுத்தி ,அந்த வகையில் அமைந்த ஹைக்கூ நன்று .
எவ்வளவு இரை வைத்தாலும்
முட்டைதான் போடுகின்றன
கோழிகள் !
இன்னா செய்தாரை திருக்குறளை வழிமொழிந்து வடித்த ஹைக்கூ சிந்திக்க வைக்கின்றது.
கல்லால் அடித்தும்
கோபம் இல்லை
சிணுங்கிச் சிரிக்கும் குளம் !
கறிக்கடைக்கு செல்லவே பயப்படும் மனிதர்கள் உண்டு. ஆனால் சிறு பூச்சி பெரிய கத்தி கண்டு அஞ்சுவதில்லை என்பதை பார்த்து , உணர்ந்து வடித்த ஹைக்கூ ஒன்று .
வெட்டுக்கத்தி
பயமின்றி உட்கார்ந்திருக்கின்றன
கறிக்கடை ஈக்கள் !
இன்று ஆசிரியர்மானவர் உறவு சரியில்லை .முன்பு தந்த மதிப்பு ,மரியாதை இப்போது ஆசிரியர்களுக்கு கிடைக்க வில்லை .ஆசிரியர்களில் சிலர் மதிக்கும் படி நடப்பதுமில்லை .மாணவர்களில் சிலர் ஆசிரியர்களை கொலை செய்யும் அளவிற்கு மோசமாகி விட்டனர் .ஆசிரியர்கள் முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ .
இலை கிள்ளிய
மாணவனுக்குத் தண்டனை
மரத்தில் குச்சி ஒடிக்கும் ஆசிரியர் !
ஆணாதிக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது .ஆண் குழந்தைக்கு சிறு வயதிலேயே ஆணாதிக்கம் விதைத்து விடுகின்றனர். ஆணாதிக்கம் பற்றி வித்தியாசமாக சிந்தித்து காட்சிப் படுத்திய ஹைக்கூ நன்று .
காட்டுக்குள்ளும் ஆணாதிக்கம்
சோளக்காடுகளெங்கும்
ஆண் பொம்மைகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி அவர்கள் திரைத்துறையில் திரைப்படப் பாடல் ஆசிரியராக வலம் வருகிறார் என்ற தகவலும் நூலில் உள்ளது ,
நம் நாட்டில் மக்கள்தொகை பெருகுவது போலவே .முதியோர் இல்லமும் பெருகி வருவது பெருமை அல்ல சிறுமை. முதியோர் இல்லத்தில் உள்ள தாயின் பாசத்தை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று .
பத்திரமாய் வைத்திருக்கிறாள்
மகனின் புகைப்படத்தை
தாயொருத்தி முதியோர் இல்லத்தில் !
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது .தங்கம் மீதான் ஆசையும் வளர்ந்து வருகிறது .நாட்டில் கொலை கொள்ளை வன்முறைகளும் பெருகி வருகிறது .தங்கம் விலை உயர்வு ஏழைகளுக்கு எரிச்சலைத் தருகின்றது .பலருக்கு திருமணங்கள் தங்கத்தால் தடை பட்டுள்ளது .ஏழைகளின் மன உணர்வை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .
ஏழைச் சிறுவர்கள்
வாங்குகிறார்கள்
மோதிர அப்பளம் !
சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன .ஹைக்கூ ரசிகர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் பிடிக்கும்.வாங்கி படித்துப் பாருங்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசிஅவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் ,