கவிமுகில் கவிதைகள்

Estimated read time 1 min read

Web team

IMG-20240803-WA00181.jpg

கவிமுகில் கவிதைகள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில்

கவிஞர் கவிமுகில் அவர்களின் புகைப்படம் தாங்கி,அட்டைப்படமே அற்புதமாக

உள்ளது பின் அட்டையில் உடலால் மறைந்தாலும் பாடல் வரிகளால் வாழ்ந்து
கொண்டிருக்கும் கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அணிந்துரை சுருக்கமும் அழகு
செய்கின்றது.உலகத்தரம் வாய்ந்த அச்சு நூலை கையில் எடுத்தாலே வாங்க வேண்டுமென்ற
ஆவலைத் தூண்டும் வண்ணம் வடிவமாக அமைக்கப்பட்ட நூல் கவிதை ரசிகர்கள் அனைவரும்
படிக்க வேண்டிய சிறந்த நூல்.

”வெறுங்கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்து மூலதனம்”என்ற வரிகளால். உலகம்
முழுவதும் அறியப்பட்ட கவிஞாயிறு தாராபாரதியின் சீடர் கவிஞர் கவிமுகில்.தனது
குருவின் பெயரில் அறக்கட்டளை நிறுவி, சிறந்த ஹைக்கூ கவிதை நூல்களுக்கு
விருதுகள் வழங்கி தனது நூல்களின் வெளியீட்டு விழாவையும் சென்னையே வியந்து
பார்க்கும் வண்ணம் மிக பிரமாண்டமாக நடத்தினார்கள்,விழாவிற்கு நானும் சென்று
எனது இதயத்தில் ஹைக்கூ நூலிற்கு தாராபாரதி விருது பெற்று வந்தேன்.விழாவில்
ஆசிரியர் கி.வீரமணி கவியருவி ஈரோடு தமிழ்பன், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
என பலரும் இலக்கிய உரை தந்து மகிழ்வித்தனர்.

கவிஞாயிறு தாராபாரதியின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது.சிறந்த
சிந்தனையாளர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரை முத்திரை பதிக்கின்றது. இந்த நூலின்
தனிச்சிறப்பு என்னவென்றால் பிண எரியூட்டி திரு. செம்பன் எரியுரை, காலணி
தைப்பவர் திரு.சிவராஜ் நடப்புரை,துப்புரவாளர் பென்சில்யாவின் கழிவுரை என
வித்தியாசமாக அவர்களின் கருத்தையும் பதிவு செய்து இருப்பது பாராட்டுக்குரிய
புதிய முயற்சி

கவிதைகளின் இலக்கண நயங்களை விட வாழ்வியல் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
மிகவும் இயல்பாக உணர்ச்சிமிக்க வரிகளை மிக அழகாக பதிவு செய்து உள்ளார் நூல்
ஆசிரியர். இன்றைக்கு கணிப்பொறியாளர் என்ற கனவில் எல்லோரும்
முழ்கிவிட்டனர்.கட்டுக்கட்டாக பணம் வந்தபோதும் கட்டுப்பாடு இன்றி சிலர்
பண்பாட்டை சிதைத்து வருகின்றனர் என்ற உண்மையை நன்கு பதிவு செய்யும் கவிதை
வரிகள் இதோ.

மென்பொருள்வேலைகளில்
நன்பொருள் இழப்புக்குத்
தயாராய் இருபாலரும்
கைமீறிய பணக்கட்டுகளில்
கைமீறிப் போன
மனக்கட்டுப்பாடுகள்

கவிஞர்.கவிமுகில் மகிழுந்து நிறுவனம் வைத்திருக்கும் மிக சுறுசுறுப்பான மனிதர்
இவருக்கும் கலிதை எழுத நேரம் எப்படி வாய்க்கிறது என்பது வியப்பானது.
உயிர்காக்கும் உன்னதப்பணி செய்யும் உயர்ந்த மருத்துவத்துறை இன்று பணத்தாசை
பிடித்து அலைந்து தேவை இல்லாத செலவுகளை இழுத்துவிட்டு பணம் பறிக்கும்
கொள்ளைக்கூடமக மருத்துவமனைகள் மாறி வருவதை பதிவு செய்யும் வைர வரிகளிள் இதோ

தைலங்களில் போக்கப்படும்
தலைவலிகளுக்கு
சி.டி,ஸ்கேன்கள்
பணம் பண்ணும் சிறப்புகள்

நமது துப்புரவுத் தொழிலாளர்களின் உழைப்பு சமுதாயத்தில் மதிக்கப்படவில்லை என்பதை
உணர்த்தும் கவிதை

தன் குழந்தைக் கழிவைத் தாய் எடுக்க
அருவருக்கும் சூழலில்
சமுக மருத்துவர்களான எங்கள் சமுதாயப் பார்வைகளில்
தென்படாத மனிதங்கள்

திருநங்கைகள் வாழ்வில் குழந்தை முதல் இன்று வரை அவர்கள் சந்திக்கும் இன்னல்
வார்த்தைகளில் சொல்லிட முடியாது. திருநங்கைகளை சக மனிதர்களாக மதிக்கும்
மனப்பான்மையே இப்போதுதான் விதைக்கப்பட்டு வருகின்றது. திருநங்கைகளின் உள்ளத்து
உணர்வுகளை நன்கு பதிவு செய்துள்ளார்.காரணம் கவிஞாயிறு தாராபாரதியின்
பாடல்களுக்கு நடனமாடும் திருநங்கை நர்த்தகி நடராஜ் பற்றி கவிஞர் கவிமுகில்
அறிந்திருந்த காரணத்தால் கவிதையில் நன்கு பதிவு செய்துள்ளார்.

சென்னையில் நடந்த கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை ஆண்டுவிழாவில் மதுரையில்
பிறந்து வளர்ந்து உலக நாடுகள் எல்லாம் சென்று நாட்டியமாடும் திருநங்கை நர்த்தகி
நடராஜ்க்கு தாராபாரதி விருது வழங்கி கௌரவித்தார்கள்.திருநங்கைகள் பற்றிய கவிதை.

இரண்டில் ஒன்றாக மாறவேண்டிய
இக்கட்டில் மன விரும்பலின்படியே
விரக்தியின் விசும்பலில் கரையாமல்

கற்காலம்.பொற்காலம் போய் இன்று தொடர்கள் காலம் என்றாகி விட்டது.எங்கு
பார்த்தாலும் தொடர்கள் பார்த்து சோம்பேறிகளாகி விட்டனர். மனிதர்கள் தொடர்களில்
நடக்கும் நிழல்களை நிஜங்களாக எண்ணி பலர் குழம்பி மனநோயாளிகளாக மாறி வருகின்றனர்
என்பது மருத்துவர்களின் கருத்து.மனநல மருத்துவர் பேராசிரியர். பெரியார்தாசன்
சொன்ன கருத்து இது.தொடர்கள் பெருகிய காரணத்தால் மனநோயாளிகன் பெருகிவிட்டனர்
என்றார்கள்.கவிமுகிலின் கவிதை வரிகள்.

அந்த சீரியல்ல வர்றவன் மாதிரியே
நம்ம புருசனும்
அங்க போயிட்டு வந்திரப்பானோ?

இப்படி மனைவி கணவனைச் சந்தேகப்படுவதும். கணவன் மனைவியையும் சந்தேகப்படுவதும்,
வக்கிரமான எண்ணங்களை வளர்த்து விடும் பணியினை தொடர்கள் செய்கின்றன. நீதிநெறி
போதித்து சமூகத்தை செம்மைப்படுத்தவேண்டிய ஊடகங்கள் பழிக்குப்பழி வாங்கும்
உணர்வை வன்முறையை வளர்த்து விடுகின்றன.

அசையும் கல்லாய் நான்
அசையாக் கல்லாய் சாமி

இப்படி சிந்திக்கவைக்கும் கல்வெட்டு வரிகள் நூல் முழுவதும் ஏராளம் உள்ளது.

நெருக்கம்
நெருக்கத்தை விலக்கிவைக்கும்
குழந்தை

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நினைவூட்டும் வரிகள்

கல்லைக் கடவுளெனச் சொல்லாதே மானிடனே
சொல்லே கடவுளெனச் சொல்வாய் திராவிடனே

என்ற வரிகள் சொல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகின்றது

கவலை கொள்ளாதேஒரு
புதிய விடியலில்
உனக்கு பிரசவம் நிச்சயம்

தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகள் காலத்தின் பதிவு இலக்கியம் என்பார்கள்.
கும்பகோணம் தீ விபத்து.சுனாமியின் கொடூரத்தாக்குதல் இப்படியும் எதையும் விட்டு
வைக்காமல் சகல தளங்களிலும் தனது கவியாற்றலை வெளிப்படுத்தி உள்ளார் கவிஞர்.
கவிமுகில் ஒரு பகுத்தறிவுவாதி என்பதால் கருத்துக்குப் பஞ்சமில்லை அறிவார்ந்த
கருத்துக்கள் ஆயிரம் உள்ளது நூல் கனமாக உள்ளது. படித்து முடித்ததும் நமது
மனமும் கனமாகி விடுகின்றது. கவிஞாயிறு தாராபாரதியின் வரிகளைச் சொல்லி நிறைவு
செய்கிறேன்.

கவிதைச் சுவைஞர்கள் கைகளில் தவழவேண்டிய நூல் இது. விழிகளைத் திருப்புங்கள்
விரல்களால் புரட்டுங்கள். சிறந்த வரிகளை உங்கள் சிந்தனைப் புலத்தில்
சேமியுங்கள்

Please follow and like us:

You May Also Like

More From Author