வங்கதேசம் : வங்கதேசத்தில் விடுதலை போரட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பொதுச்சொத்துக்கள் பெருமளவு சேதமடைந்தன.
பின்னர், இந்த இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அப்போது மாணவர்கள் போராட்டம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இந்த கலவரத்தில் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.
இந்தியாவில் தஞ்சம் :
வங்கதேச நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா (அவாமி லீக் கட்சி) தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஹசீனா இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் வங்கதேச அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பிரிட்டனில் உள்ள அவரது சகோதரியுடன் வசிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ ஆட்சி :
அதேநேரம், அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் வங்கதேசத்தில் தற்காலிகமாக ஆட்சியை அமைத்துள்ளார். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்தியாவுடன் நட்புறவை கொண்டுளள்து . வங்கதேச எதிர்க்கட்சியான
வங்களாதேஷ தேசியவாத கட்சியை (பிஎன்பி) பாகிஸ்தான் உடன் நட்புறவை கொண்டு செயல்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் – அமெரிக்கா :
இப்படியானஅரசியல் சூழ்நிலையில் தான், வங்கதேச நாட்டின் செய்தி நிறுவனமான `பிளிட்ஸ்’ செய்தி நிறுவன ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த வங்கதேச கலவரத்திற்கு பின்புலமாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டத்தின் பிண்ணனி :
அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு (வங்கதேச எதிர்க்கட்சி) முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் இந்த போராட்டத்தை தூண்டினார். இங்கிலாந்துக்கு தப்பியோடிய பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து வங்கதேச போராட்டத்தை செயல்படுத்தினார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார்.
ஊடுருவிய தீவிரவாதிகள் :
வங்கதேச மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் உள்ளது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகள் போராட்ட களத்தில் ஊடுருவி வன்முறை களமாக இதனை மாற்றினர் என பிளிட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா சதி திட்டம் :
இந்தியாவுக்கு தப்பியோடிய ஷேக் ஹசீனா முன்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ வங்கதேசம், மியான்மரின் சிலபகுதிகளை ஒன்றிணைத்து புதிய கிறிஸ்தவ நாட்டை அமைக்க அமெரிக்கா செயல்படுகிறது. மேலும், வங்கக்கடலில் புதிய கடற்படைத் தளம் அமைக்கவும் அமெரிக்கா முயற்சி செய்கிறது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக நாட்டில் சதி நடக்கிறது என்று கூறியுள்ளார்.