சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டில், ஆப்பிரிக்காவுடனான பல ஒத்துழைப்பு முன்மொழிவுகளைச் சீனா முன்வைத்தது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் செப்டம்பர் 10ஆம் நாள் கூறுகையில், பெய்ஜிங் உச்சி மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஆப்பிரிக்காவுடனான சீன ஒத்துழைப்புகளின் தனிச்சிறப்புகளை, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ தொகுத்துக் கூறினார்.
முதலாவதாக, ஆப்பிரிக்காவின் உள்விவகாரத்தில் சீனா தலையிடாது. மனமார்ந்த முறையில் உதவியளிக்கும். இரண்டாவதாக, ஆப்பிரிக்காவின் வளர்ச்சித் தேவைக்கிணங்க, ஆப்பிரிக்காவின் சொந்த வளர்ச்சி ஆற்றலை உயர்த்துவதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கும்.
மூன்றாவதாக, ஆப்பிரிக்காவில் பகைமையை உருவாக்குவதையும், ஆப்பிரிக்காவைப் பயன்படுத்தி தன்னலத்தைப் பெறுவதையும் சீனா எதிர்க்கிறது என்றார்.
மேலும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம் நிறுவப்பட்ட 24 ஆண்டுகளாக, ஆப்பிரிக்க வளர்ச்சியை முன்னேற்றி, ஆப்பிரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
சர்வதேச சமூகம், குறிப்பாக வளர்ந்த நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிறுவனங்கள் பொறுப்பேற்று, ஆப்பிரிக்க நாடுகள் கடன் சுமையைத் தணித்து, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதற்கு உதவியளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.