சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரானில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று செய்தி நிறுவனம் ஏபி தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஒரு வாரமாக இஸ்ரேலால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய கோரத்தாண்டவத்திற்கு பிறகு அங்கு முழு பதற்றமான நிலைமை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.