மலேசியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அந்நாட்டு தலைமையமைச்சர் அன்வர் இப்ராஹிமுடன், ஏப்ரல் 16ஆம் நாள் பிற்பகல் தலைமையமைச்சர் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது இரு நாடுகளும் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் பொது எதிர்கால சமூகத்தை கூட்டாக கட்டியெழுப்பிவருகின்றன. சீன-மலேசிய உறவு புதிய பொற்காலத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தலைமையமைச்சர் அன்வருடன் இணைந்து, இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும், இதனை மேலும் உயர் நிலை நெடுநோக்கு திசையை நோக்கி வளர்க்கவும் விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.
இது, இரு நாட்டு மக்களுக்கும் அதிகமான நலன்கள் ஏற்படுத்தி, பிரதேசத்தின் செழுமை மற்றும் நிலைப்புக்கு முக்கிய பங்காற்றி, சீனா மலேசியா இடையேயான நட்பார்ந்த உறவை மேலும் வெளிகொணர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
அன்வர் கூறுகையில், சீனா, மலேசியாவின் நம்பகமான நண்பர் ஆகும். ஷிச்சின்பிங்கின் பயணத்தில் எட்டப்பட்ட ஒத்துழைப்பு சாதனைகள், மலேசியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தெரிவித்தார்.
மேலும், ஒருதரப்புவாதம் தலைதூக்குதலை எதிர்கொண்டு, சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இடர்ப்பாடுகள் மற்றும் சவால்களை கூட்டாக சமாளிக்கவும் மலேசியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தவிர, சீனா மலேசியா இடையே எண்ணியல் பொருளாதாரம், சேவை வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, இருப்புப் பாதை, அறிவு சொத்துரிமை உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இரு தரப்பு ஒத்துழைப்புக்கான ஆவணங்கள் கையொப்பமிட்ட நிகழ்வில் இரு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.