தமிழ்நாடு வருவாய்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்து வந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக மொத்தம் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 06.07.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்கி பெறப்படவுள்ளது. விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 04.08.2025 என்றும், தேர்வு தேதி 02.09.2025 என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு தேர்வில் தமிழ் ஒரு பாடமாக இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தேர்வில் மதிப்பெண்கள் பின்வருமாறு வழங்கப்பட உள்ளன:
வாசிக்கும், எழுதும் திறன் (தமிழில்): 30 மதிப்பெண்கள்
வசிப்பிடம் சான்றிதழ்: 35 மதிப்பெண்கள்
மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டத் திறன்: 10 மதிப்பெண்கள்
நேர்காணல்: 15 மதிப்பெண்கள்
இவ்வாறு மொத்தம் 100 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி நிர்ணயிக்கப்படும். இதற்கான நேர்காணலை, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர்கள் நடத்தவுள்ளனர். பெறப்படும் விண்ணப்பங்கள், தேதிவாரியாக தனிப் பதிவேட்டில் பதியப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான ஒரு முக்கிய தகுதியாக, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட தாலுகா அல்லது கிராமத்தில் வசித்து வந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பணியிடங்கள் தொடர்பான முழுமையான விவரங்கள், நாளைய தினசரி பத்திரிகைகளிலும், மாவட்ட வேலை வாய்ப்பகங்களிலும் அறிவிக்கப்பட உள்ளது. கிராமத்தின் வளர்ச்சிக்காக நேர்மையாக பணியாற்ற விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.