அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “கூட்டணிக்கு தலைமை நாங்கள் தான். நான் எடுப்பதுதான் இறுதி முடிவு. அதிமுக கூட்டணி தெளிவான கூட்டணி, 2026ல் பிரம்மாண்டமான வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். எங்கள் கூட்டணியில் பாமக இப்போது இல்லை. அவர்கள் வந்தாலும் வரலாம். அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்.
விசிக மாநாட்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி கம்பம் நடவும் அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கபட்டு திமுக கூட்டணியில் விசிகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்க வேண்டுமா?
ஜெயலலிதாவை கொலை செய்ய எத்தனையோ முயற்சிகள் நடைபெற்றன. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை மு.க.ஸ்டாலின் உடைக்க பார்த்தார். எந்த கொம்பனும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை. அதிமுக தொண்டன் யாருக்கும் பயப்பட மாட்டான். ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக. ஆண் ஜாதி, பெண் ஜாதி மட்டுமே அதிமுகவினுடைய நோக்கம். மாநிலத்தில் நடக்கும் தேர்தலுக்கும், மத்தியில் நடக்கும் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத கட்சித் தலைவர் ஸ்டாலின்” என்றார்.