இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய பங்காற்றியதாக மீண்டும் தெரிவித்தார்.
குறிப்பாக, இரு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட விரும்பினால், மோதலை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
மே 10 முதல் இன்று வரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 24 முறை திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார்: இந்நிலையில், பிரதமர் மோடி இதுவரை , டிரம்பின் அறிவிப்பு குறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூலை 21ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தைக் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் மோடியே நேரடியாக பதிலளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
“நாங்கள் பிரதமரைத் தவிர வேறு எந்த அமைச்சரிடமும் பதில் எதிர்பார்ப்பதில்லை. இது தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகளைப் பற்றிய முக்கியமான விஷயம்” என்று அவர் கூறினார்.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் வெறும் பாரம்பரிய நிகழ்வாகவே முடிகின்றன என்றும், இந்தக் கூட்டங்களில் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.
“ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜு போன்றவர்கள் வருவார்கள், புன்னகைத்தபடியே வாழ்த்துவார்கள்… ஆனால் உண்மையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை” என்றும் அவர் சாடினார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிரதமரிடமிருந்து நேரடியாக பதிலை கோரும் வகையில் நாடாளுமன்றத்தில் எதிர்பார்க்கப்படும் விவாதம், வரும் நாட்களில் அரசியல் சூழலை பதற்றமாக்க வாய்ப்புள்ளது.
