மாணவி தற்கொலை குறித்த முழு விவரங்களையும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கடமை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் மற்றுமொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார். துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில், தமிழகம் முழுவதுமிருந்து மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
உடனடியாக, மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, மேலும் இது போன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், மாணவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்துப் பலமுறை கேள்வி எழுப்பியிருந்தோம்.
இந்த நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கடமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.