“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Estimated read time 1 min read

புற்றுநோய் ஒரு மரபணு நோயா? பெற்றோரிடம் இருந்து பரவுகிறதா? அல்லது வாழ்க்கை முறைக் காரணங்களால் உருவாகிறதா? இது பற்றிச் சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கிறது ? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

இந்தியாவில் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை முதிர்ச்சி, நகர்ப்புற வாழ்க்கை முறை, புகைபிடித்தல், உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், காற்று மாசு உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த புகைக் கட்டுப்பாடு, HPV மற்றும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி, ஆரம்ப நிலைச் சோதனைகள், மரபணு ஆலோசனை மையங்கள் அமைத்தல் போன்றவற்றிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும், பல புற்றுநோய் பதிவுத் தளங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த நோய் குறித்து உலகம் முழுவதுமுள்ள பலரிடம் இருந்து எழும் ஒரு கேள்வி புற்றுநோய் ஒரு மரபணு நோயா என்பதே. சமீபத்திய ஆராய்ச்சிகள் புற்றுநோய் ஒரு மரபணு நோய்தான் என்பதை உறுதிபடுத்தியிருந்தாலும், அடிப்படையில் அவை வாழ்நாளில் ஏற்படும் மாற்றங்களினால் தோன்றுவதே அன்றி, வம்சாவளியில் வரும் மாற்றங்களால் அல்ல என்பதையும் எடுத்துரைத்துள்ளன.

செல் மட்டத்தில் பார்க்கும்போது, புற்றுநோய் என்பது செல்களில் உள்ள DNA-வில் ஏற்படும் பிழைகளால் உருவாகிறது. இந்த மாற்றங்கள் செல்கள் கட்டுப்பாடின்றிப் பெருகவும், உடலின் இயல்பான கண்காணிப்பு முறைகளில் இருந்து தப்பிக்கவும் வழிவகுக்கின்றன. புகைபிடித்தல், காற்று மாசு, வைரஸ் தொற்றுகள், அலைகற்றைக் கதிர்கள் உள்ளிட்டவையே பெரும்பாலான புற்றுநோய்களுக்குக் காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், புற்றுநோய் ஒரு மரபணு நோய்தான் என்றாலும், பெற்றோரிடமிருந்து மரபு ரீதியாக வரும் புற்றுநோய்களின் விகிதம் மிகவும் குறைவு என்பதே எதார்த்தமான உண்மை.

குறிப்பாக BRCA1, BRCA2 எனப்படும் மரபணுக்களில் பிழை ஏற்பட்டால் மார்பக மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம். Lynch syndrome காரணமான மரபணுக்கள் குடல் புற்று நோயைத் தூண்டும். அதேபோல, RB1 மரபணு Retino blastoma எனப்படும் கண் புற்று நோய்க்குக் காரணமாக அமைகிறது. இவை மக்கள் மத்தியில் பெருமளவில் காணப்படும் புற்றுநோயாக இருந்தாலும், உலகளவில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே இவை மரபணு பிழைகளால் உருவாகின்றன.

ஆனால் இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது புற்றுநோய் உருவாகும் போது மரபணுக்களும், சூழல் காரணிகளும் சேர்ந்து செயல்படுகின்றன என்பதே. புகை, மதுபானம், உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, காற்று மாசு, வேலைத் தொடர்பான ஆபத்துகள் போன்றவைப் புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கின்றன. இதனால், ஒருவருக்கு மரபணு பிழைகள் இருந்தாலும் அவர்ச் சூழல் காரணிகளைக் கட்டுப்படுத்தினால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம் என்பதையே விஞ்ஞானிகள் எடுத்துரைக்கின்றனர்.

இதற்கிடையே மரபணு சோதனைகளும் தற்போது புற்றுநோய் சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நோயாளியின் புற்றுநோய் கட்டியில் உள்ள DNA-வை ஆய்வு செய்து அதிலுள்ள மாற்றங்களைக் கண்டறிவதன் மூலம், குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ற சிகிச்சைகளை நோயாளிக்கு அளிக்க முடியும்.

இது நோயாளியின் உடல்நிலை முன்னேற்றங்கள் குறித்து முன்னரே அறிந்துகொள்ளவும், குடும்பத்தில் பிறருக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை முன்கூட்டியே கண்டறியவும் உதவுகிறது.

எனவே ஒருவர் புகை மற்றும் மதுபானங்களைத் தவிர்ப்பது, முறையான தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது, காற்று மாசிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, சீரான உணவுப் பழக்கங்களைக் கடைபிடிப்பது, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற கட்டுப்பாடான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க அத்தியாவசியமாகிறது.

என்னதான் மரபணு, அறிவியல் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியிருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதே உண்மையான பாதுகாப்பு. நம்மை நாமே காக்கும் அந்தப் பொறுப்பே அனைவருக்கும் ஆரோக்கியமான வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author