வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில், தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற சுதந்திர அடையாளமாக விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம்.
ஆங்கில ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகு முத்துக் கோன், 1710-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.
1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் அழகுமுத்துகோன் மன்னராக முடிசூடிக்கொண்டார். எட்டயபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் என்ற கான்சாகிப் வந்தனர்.
ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டக்கூடாது என்று முடிவெடுத்த அழகுமுத்துக்கோன், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை ? எனக் கேள்வி கேட்டு கான்சாகிப்புக்கு கடிதம் எழுதினார்.
கடும் கோபமடைந்த கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்துக் கொண்டு எட்டயபுரத்தை முற்றுகையிட்டுத் தாக்கத் தொடங்கினான். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கும் கான்சாகிப்புக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.
இறுதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்களை வெட்டிய பிரிட்டிஷ் படை, அவர்களைத் துடிதுடிக்கக் கொன்று குவித்தது. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயின் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் மாவீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின.
வெடித்துச் சிதறிய மாவீரன் அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைத்து சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அந்த இடத்தில் ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
வீர மரணம் அடைந்தவர்களுக்கான நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் கட்டாளங்குளம் மக்கள், புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு, பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.