சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் இந்தியப் பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஆகஸ்ட் 18 முதல் 20ஆம் நாள் வரை வாங் யீ இந்தியாவில் பயணம் மேற்கொண்டு, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து, வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோவலுடன் சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான சிறப்பு பிரதிநிதிகளின் 24ஆவது பேச்சுவார்த்தை நடத்தினார் என்றார்.
வாங் யீயின் பயணத்தில் பல்வேறு துறைகளிலான பேச்சுவார்த்தை அமைப்பு முறையை மீண்டும் துவக்குவது, ஒன்றுக்கொன்று நலன் பயக்கும் ஒத்துழைப்பை ஆழமாக்குவது, பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்பது, உலகளாவிய அறைகூவலைக் கூட்டாக சமாளிப்பது, ஒரு தரப்பு மேலாதிக்கவாதத்தை எதிர்ப்பது ஆகியவற்றில் இரு தரப்பினரும் ஒத்தக் கருத்துக்களை எட்டினர் என்று மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு துறைகளிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளை அளித்து, மனித குலத்தின் முன்னேற்ற இலட்சியத்துக்கு பங்காற்ற வேண்டும் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.