சீன தலைநகர் பெய்ஜிங் மாநகரின் டியென் அன் மன் சதுக்கத்தில் இன்று காலை 9 மணியில், சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாபெரும் இராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தி, இராணுவ அணி வகுப்பை பார்வையிட்டார். வரலாற்றை நினைவில் கொண்டு, தியாகிகளை நினைவு கூர்ந்து, அமைதியைப் பேணிக்காத்து, எதிர்காலத்தை உருவாக்குவது என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்புக்கிணங்க, 26 நாடுகளின் தலைவர்கள், அரசுத் தலைவர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். சீன அரசின் அழைப்பின் பேரில், சில நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், அரசின் துணை தலைமையமைச்சர்கள், உயர் நிலை பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், முன்னாள் அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தவிரவும், சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள், ராணுவ விவகார அதிகாரிகள், சீனாவுக்கான சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 50 சர்வதேச நண்பர்கள் அல்லது குடும்பத்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
80 ஆண்டுகளுக்கு முன்பு, சீன தேசம் மேற்கொண்ட 14 ஆண்டுகால கடினமான போராட்டத்தின் மூலம், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றுள்ளது. உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி முழுமையாகப் பெறுவதை இது எடுத்துக்காட்டியுள்ளது. சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மிகவும் முன்பே தொடங்கி, மிக நீண்டகாலமாக நடைபெற்றது. மாபெரும் தேசிய தியாகத்துடன், உலக பாசிச எதிர்ப்பு போருக்கான கீழை நாடுகளின் முக்கிய போர்க் களமாக சீனா திகழ்கிறது. உலக பாசிச எதிர்ப்பு போரின் வெற்றிக்கு சீனா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்கு ஆற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.