தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவிகளிடம் கால் அமுக்கியதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியையின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் சுமார் 40 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் நிலையில், கலைவாணி என்ற பெண் ஆசிரியர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அந்நிலையில், பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளைத் தனக்குக் கால் அமுக்குமாறு கட்டாயப்படுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மாணவிகள், பள்ளி வளாகத்திலேயே கால் அமுக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தலைமையாசிரியை கலைவாணியிடம் விசாரணை மேற்கொண்டு, அவசர நடவடிக்கையாக அவர் அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், அரூர் பகுதியிலும், மாவட்டத்திலும் பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.