விடுதலைப் போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். நிகழ்வுகளை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமான மூலம் சென்னை செல்கிறார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “துணை குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்ல உள்ளேன். தமிழக கட்சி நிலவரங்களை குறித்து பாஜக தலைமையிடம் பேச தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. தற்பொழுது டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது பலமான கூட்டணியாக உள்ளது. கண்டிப்பாக வெற்றி பெறும். கடந்த 2001 ம் ஆண்டு இது போன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஊடக ஆதரவு இல்லை. ஆனால் புரட்சித்தலைவி ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
தற்பொழுது மக்கள் மனநிலையில் மாற்றம் வந்துள்ளது. அது ஆட்சி மாற்றமாக மாறும். இந்தியாவில் 90 முறை மாநில ஆட்சிகளை கலைத்தது காங்கிரஸ் ஆட்சி. பாஜக ஆட்சி அல்ல. நான் ஓபிஎஸ் உடன் தற்பொழுது போனில் பேசினேன். உறவு சீராக உள்ளது. தேவைபட்டால் தினகரனுடனும் பேசுவேன். ஆட்சி மாற்றத்திற்கு யார் யாரிடம் பேச வேண்டுமோ, அவர்களிடம் பேசுவேன். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் உள்ளது. ஆகவே ஓபிஎஸ் உட்பட அனைவரும் இணைவார்கள்” என்றார்.