இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 318/2 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைப் பெற்றது.
இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 38 ரன்னில் அவுட்டானாலும் ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 173* ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து விளையாடிய சாய் சுதர்சன் சதத்தை நழுவ விட்டு 87 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் இரட்டை சத்தத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய் ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
ரோஹித், பண்ட்டை முந்திய கில்:
அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் அரை சதத்தை அடித்து அசத்தினார். எதிர்ப்புறம் களமிறங்கிய நித்திஷ் ரெட்டி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். 4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் நித்திஷ் ரெட்டி அரை சதத்தை கோட்டை விட்டு 43 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அப்போது வந்த 2வது நாள் உணவு இடைவெளியில் 427/4 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் சதத்தை நெருங்கி வரும் கேப்டன் சுப்மன் கில் 75*, துருவ் ஜுரேல் 7* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக கடந்த இங்கிலாந்து தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட கில் முதல் தொடரிலேயே 754 ரன்கள் குவித்து 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
அதே ஃபார்மில் இத்தொடரிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் டெஸ்ட் கேப்டனாக 1000 ரன்கள் கடந்துள்ளார். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் இதுவரை அவர் 71 இன்னிங்சில் 2772* ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் 75 ரன்கள் அடித்ததன் வாயிலாக அவர் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை முந்தி சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சுப்மன் கில்: 2772 ரன்கள் (71 இன்னிங்ஸ்)
2. ரிஷப் பண்ட்: 2731 ரன்கள் (67 இன்னிங்ஸ்)
3. ரோஹித் சர்மா: 2716 ரன்கள் (69 இன்னிங்ஸ்)
