உலகில் பல்வேறு நாடுகளில் அரிசி ஒரு பொதுவான உணவாக இருந்தாலும், ஜப்பானில் விளையும் ‘கின்மேமை ப்ரீமியம்’ அரிசி ஒரு ஆடம்பரப் பொருளாக மாறியுள்ளது.
டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யும் இந்த அரிசி, தற்போது ஒரு கிலோ ரூ.12,557 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது, கடந்த 2016-ல் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகின் மிக விலையுயர்ந்த அரிசியாகப் பதிவானது.
இந்த அரிசியானது, சாதாரண அரிசியைப் போலச் சமைப்பதற்கு முன் கழுவ வேண்டியதில்லை; ஏனெனில் இது நவீன நெல் அரவையில் முன்கூட்டியே கழுவப்பட்டு, ஸ்டார்ச் மற்றும் தவிடு நீக்கப்பட்டு ஆறு மாதங்கள் பதப்படுத்தப்பட்டு சுவை கூட்டப்படுகிறது.

இந்த அரிசி இணையற்ற ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இது வழக்கமான அரிசியை விட 6 மடங்கு அதிக லிப்போபோலிசாக்கரைடுகளை (LPS) கொண்டுள்ளது. இந்த LPS-கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் நோய்களை எதிர்த்துப் போராட உதவும் என்று நம்பப்படுகிறது.

ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளையும் இந்த அரிசியை அறிமுகப்படுத்தியவர், டோயோ ரைஸ் கார்ப்பரேஷனின் 91 வயது தலைவர் கெய்ஜி சைகா ஆவார். விலை மிக அதிகமாக இருந்தாலும், இந்த அரிசியின் வணிகம் லாபகரமானது அல்ல என்று சைகா தெரிவித்திருந்தாலும்,
ஜப்பானிய அரிசி உற்பத்தியை மேம்படுத்த அவர் மேற்கொண்ட பல கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
