உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொக்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவத் தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெற்றது. நள்ளிரவு ஒன்று நாற்பத்தைந்து மணிக்கு சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்ட போது கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா… கோவிந்தா… எனும் கோஷத்துடன் பெருமாளை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு திருப்பதியில் பக்தர்கள் அனைவரும் பரமபத வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் கோயில் முன் வாசல் முதல், தங்க கொடிமரம், பலி பீடம், சொர்க்கவாசல், துணை சன்னதிகள் உள்ளிட்டவை 10 டன் மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் கண்ணைப் பறிக்கும் வகையில் அழகாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், மலர் அலங்காரத்தை மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.