தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இனி விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது இறுதி திரைப்படமாக சொல்லப்படும் அவரது ‘தளபதி 69’- ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதனை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற எச். வினோத் இயக்கி வருகிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதற்கு கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக விஜயின் ஜனநாயகன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கொடைக்கானல் உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விஜய் படப்பிடிப்பு தளத்தில் அசைவ விருந்து வைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரின் இறுதி திரைப்படம் என சொல்லப்படும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் இனிமேல் முழு நேர அரசியலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.