சீன-அமெரிக்க ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை ஆகஸ்டு 12ஆம் நாள் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கையில், இரு தரப்புகளும் இவ்வாண்டில் ஜெனீவா, லண்டன், ஸ்டாக்ஹோம் ஆகிய இடங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், வரி விதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆகஸ்டு 12ஆம் நாள் தொடங்கி, சீனப் பொருட்களின் மீது அமெரிக்கா மேற்கொண்ட கூடுதல் வரி விதிப்பிலிருந்து 24 விழுக்காடு பகுதி தொடர்ந்து 90 நாட்களுக்கு இடை நிறுத்தப்படுவதாகவும், இப்பொருட்களின் மீது இன்னும் 10 விழுக்காடு மட்டுமே கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அமெரிக்கப் பொருட்களின் மீது சீனா மேற்கொண்ட 24 விழுக்காடு கூடுதல் வரி விதிப்பு மீண்டும் 90 நாட்களுக்கு இடை நிறுத்தம் வைக்கப்படும் என்றும் அவற்றுக்கு 10 விழுக்காடு மட்டுமே கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜெனீவா கூட்டறிக்கையின்படி, அமெரிக்காவின் மீதான வரித்துறை சாராத தடை நடவடிக்கைகளை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அல்லது நீக்கம் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள ஒத்தக் கருத்துகளைச் செயல்படுத்தும் விதம், சீன அரசவையின் அங்கீகாரத்துடன், 2025ஆம் ஆண்டு ஆகஸ்டு 12ஆம் நாள் 12:01 மணிக்கு தொடங்கி, அமெரிக்கப் பொருட்களின் மீது சீனா மேற்கொண்ட 24 விழுக்காடு கூடுதல் வரி விதிப்பு தொடர்ந்து 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவற்றுக்கு 10 விழுக்காடு மட்டுமே கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.