இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடிடுத்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படை ஆக 9ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் . இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று நேற்று முதல் கால வரலாற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
மேலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொள்கின்றனர் .