2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு மற்றும் தொடர்பான நிகழ்வுகள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்ட் 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தியது.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லியு பின் இக்கூட்டத்தில் கூறுகையில், இவ்வுச்சி மாநாடு ஆகஸ்ட் 31ஆம் நாள் முதல் செப்டம்பர் 1ஆம் நாள் வரை தியன் ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை சீனா நடத்துவது இது ஐந்தாவது முறை. இவ்வமைப்பு நிறுவப்பட்ட பிறகு மிக பெரிய அளவில் நடைபெறும் உச்சி மாநாடு இதுவாகும். அப்போது அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் இணைந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெற்றிகரமான அனுபவங்களைத் தொகுப்பதோடு, இவ்வமைப்பின் வளர்ச்சி வரைபடத்தை வரைவார் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்திற்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிளஸ் கூட்டத்துக்கும் தலைமை தாங்கி, இவ்விரு கூட்டங்களில் உரை நிகழ்த்தவுள்ளார் என்று தெரிவித்தார்.
தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் விரைவாக வளர்ந்து வரும் முக்கியக் காலக் கட்டத்தில் உள்ளன. தியன் ஜின் உச்சி மாநாட்டின் மூலம், இப்பிரதேச நாடுகளின் மக்களுக்கு நீண்ட அமைதி, பொதுப் பாதுகாப்பு, கூட்டு செழுமை, திறப்பு மற்றும் சகிப்பு, இணக்கம் மற்றும் நட்புறவு ஆகியவற்றைக் கொண்ட சிறந்த சூழலை வழங்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.