டெல்லியில் பிரதமர் மோடி உடன் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவிற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸ் நேற்று இரவு புதுதில்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தகக் குழு ஒன்றும் வந்துள்ளது.
புதுதில்லியில் இன்று முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் 9வது ரைசினா உரையாடலில் மிட்சோடாகிஸ் தலைமை விருந்தினராகவும், முக்கியப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்க்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
முன்னதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவுமண்டபத்தில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது மனைவி மரேவா கிராபோவ்ஸ்கி-மிட்சோடாகிஸ் ஆகியோர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசும் டெல்லியில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி,
இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். விவசாயம், மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், திறன் போன்ற புதிய வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் இடம் குறித்துஇந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டன எனத் தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்தும், இணைப்பும் தான் அதிக முன்னுரிமை அளிக்கும் பகுதிகள். தற்காப்பு கூட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தி இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று அவர் கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு பேசிய கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்,
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்தவும், அதை மூலோபாய நிலைக்கு மேம்படுத்தவும் இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன எனத் தெரிவித்தார். விவசாயம், சுற்றுலா மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேசியதாக கூறினார்.