கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழாவில், அம்மாநில முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசினார்.
இந்த நிகழ்வில், சமூக ஊடகங்களில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் யூடியூப் செய்தி சேனல்களுக்கு, அரசு அங்கீகார லைசென்ஸ் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை நேரடியாக ஏற்ற சித்தராமையா, “தொலைக்காட்சி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும், அரசு அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் என்ற திட்டத்தை அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது” எனக் கூறினார்.
மேலும், கீழ்த்தரமான உள்ளடக்கங்களை வெளியிட்டு, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில யூடியூப் சேனல்களை அவர் கண்டித்தார். “பத்திரிகை துறையின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியம்” என தெரிவித்த அவர், சமூக பொறுப்புடன் செய்தி வழங்கும் பணியில் ஊடகங்கள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.