பேடிஎம் ஆப் மூலம் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1 சதவீதம் மதிப்புள்ள தங்க நாணயங்களை பெறலாம். ஸ்கேன் & பே, ஆன்லைன் ஷாப்பிங், பணம் அனுப்புதல், ரீசார்ஜ், பில் பேமெண்ட் மற்றும் வழக்கமான பேமெண்ட்களுக்கும் இது பொருந்தும். 100 தங்க நாணயங்களை 1 ரூபாய் மதிப்புள்ள தங்கமாக மாற்றலாம்.
யூபிஐ , கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் பேமெண்ட்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். யூபிஐ மூலம் கிரெடிட் கார்டு மற்றும் ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் இரட்டிப்பு தங்க நாணயங்கள் கிடைக்கும்.
இதுகுறித்து பேடிஎம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தங்கம் எப்போதும் இந்தியர்களுக்கு பிடித்தமான மதிப்புமிக்க ஒரு பொருளாகும். எனவே, ஒவ்வொரு டிஜிட்டல் பேமெண்ட்டிலும் தங்க நாணயங்கள் கிடைப்பதால் அன்றாட செலவுகளை அர்த்தமுள்ள சேமிப்பாக மாற்றுகிறோம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சேமிப்பு மற்றும் செழிப்பிற்கான புதிய வழிகளைத் திறந்துள்ளன. இந்த மாற்றத்தில் பேடிஎம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.” என்றார்.
பேடிஎம் நிறுவனம் சமீபத்தில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. டியூஷன் கட்டணம் மற்றும் பயன்பாட்டு பில்களுக்கான நினைவூட்டல்கள், மாதாந்திர செலவுகளின் அறிக்கை, தனிப்பயனாக்கப்பட்ட யூபிஐ ஐடி, பரிவர்த்தனைகளை மறைக்க அல்லது காட்ட விருப்பம், எக்செல் அல்லது PDF-ல் யூபிஐ அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்வது மற்றும் ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட் மூலம் விரைவான பேமெண்ட்கள் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த முயற்சி, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக டிஜிட்டல் பேமெண்ட்களை எளிதாக்குவதற்கும், பாதுகாப்பானதாக்குவதற்கும், லாபகரமானதாக்குவதற்கும் பேடிஎம் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையைக் காட்டுகிறது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் இந்த பண்டீ சீசனில் இந்த சிறப்புத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. பேடிஎம் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு தங்க நாணயங்கள் கிடைக்கும். அந்த நாணயங்களை தங்கமாக மாற்றிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் பயனர்களிடைய அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப் மூலமாக டிஜிட்டல் தங்கம் வாங்குவது, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற திட்டங்கள் ஏற்கெனவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. நிறையப் பேர் இந்தத் திட்டங்களில் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர். இதுபோன்ற சூழலில் பேடிஎம் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த திட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.