எத்தியோப்பியாவில் ஹெய்லி குப்பி என்ற எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு கரும்புகை மற்றும் சாம்பல்களை வெளியேற்றி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எத்தியோப்பியாவின் அஃபார் மாகாணத்தில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்தது. ஹெய்லி குப்பி எரிமலை வெடித்ததில் 33 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அடிவரை சாம்பல் புகையும், சல்ஃபர் டை ஆக்சைடு புகையும் சீறிப்பாய்ந்ததாகச் செயற்கைக்கோள் தரவுகள் தெரிவித்துள்ளன.
ஹெய்லி குப்பி எரிமலை மக்கள் வாழும் பகுதியிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் சேதமோ ஏற்படவில்லை.
சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஹெய்லி குப்பி எரிமலை வெடித்து அதன் சாம்பல் புகைகள் ஏமன் மற்றும் ஓமன் நாடுகளை நோக்கிப் பரவி வருகிறது.
