மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான் எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ் கட்சி அவருக்கு கொடுக்காத மரியாதையை நாங்கள் கொடுத்தோம். அவரை அவமதிக்கும் வகையிலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்பட்டு உள்ளன. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் காரணமாகவே, ஏழைத்தாயின் மகனாகிய மோடி, 3வது முறை உங்களுக்கு சேவை செய்ய உங்களின் ஆசி வேண்டி வந்துள்ளேன். ஆதிவாசிகளின் பங்களிப்பை காங்கிரஸ் எப்போதும் அங்கீகரித்தது கிடையாது. பழங்குடியினரை பாஜக அரசு பெருமைப்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் எப்போதும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்தது, நாங்கள் அவரை கவுரவித்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆனால் நாடு எரியும் என காங்கிரஸ் அரச குடும்பம் மிரட்டுகிறது. 2014, 19 ல் இதேபோல் தான் செய்தனர். அப்படி எதுவும் நடந்ததா? இன்று நாட்டில் நெருப்பு இல்லை. அவர்கள் உள்ளங்களில் தான் பொறாமை இருக்கிறது. பிரிவினை மற்றும் அச்சுறுத்தல் அரசியலில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டு உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான்.
வரலாற்று உண்மைகளை திரித்ததும் அக்கட்சி தான். உலகத்தின் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் பார்த்து கொண்டு உள்ளீர்கள். உலகில் உள்ள அனைவரும் அச்சத்தின் நிழலில் வாழ்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ, என்ன பிரச்னை வருமோ என்று நடுங்கிக் கொண்டு உள்ளனர்.
அத்தகைய உலகத்திற்கு வலிமையான மற்றும் சக்தியான இந்தியா தேவைப்படுகிறது. இந்தியாவை நிலைநிறுத்த வலிமையான அரசு தேவை. உங்களின் ஓட்டே வலிமையான இந்தியாவை கட்டமைக்கும். இண்டி கூட்டணி கட்சிகள், அவர்களின் தேர்தல் அறிக்கை காரணமாக குழம்பி போயுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை திவாலாக்கி விடும்.
நாட்டை பாதுகாக்க அணு ஆயுதங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் பாதுகாக்க முடியாது. ஆனால், அதனை ஒழித்துக்கட்ட காங்கிரஸ் முயற்சி செய்கிறது. நாட்டை அபாய நிலையில் தள்ள அக்கட்சி விரும்புகிறது. நாட்டை எந்த திசையில் இயக்க வேண்டும் என முடிவெடுக்க முடியாமல் ‛ இண்டி’ கூட்டணி குழம்பி வருகிறது. எனது 10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரைலர் தான் எனத் தெரிவித்தார்.