சென்னை : தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்குகளின் முடிவில் பணிநிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் என்னென்ன என்பதை அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் பட்டியல் போட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார்.
அதன்படி, “தொழில் சார்ந்த நோயால் பாதிக்கப்படும் தூய்மை பணியாளர்களின் சிகிச்சைக்காக தனித் திட்டம், பணியின் போது இறக்க நேர்ந்தால் ரூ. 10 லட்சம் ரூபாய் நிவாரணம். தூய்மை பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கும்போது, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இதைப்பெற்று தவறாது கடன் செலுத்துபவற்கு 6% வட்டி மானியம் வழங்கப்படும், இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும்.
தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அவர்களுக்கு உயர் கல்வி கட்டண சலுகை மட்டுமின்றி, விடுதி மற்றும் புத்தக கட்டணங்களுக்கான உதவித்தொகையாக ‘புதிய உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
நகர் புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, 3 ஆண்டுகளில் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் உதவியோடு 30,000 குடியிருப்புகள் கட்டித்தரப்படும். கிராமப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.