சவுதி அரேபியாவும், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இரு நாடுகளின் பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. வளைகுடா அரபு நாடுகள் தங்களது நீண்டகால பாதுகாப்புக்கு நம்பியிருந்த அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சந்தேகத்துடன் இருப்பதால், சவுதி – பாகிஸ்தான் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ முகாம் கத்தாரில் இருந்தும், கடந்த வாரம் இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது அரபு நாடுகளின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து சவுதியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இது குறிப்பிட்ட நாடுகள் அல்லது சம்பவங்களை குறிவைத்து எடுக்கப்பட்ட தீர்மானமல்ல. பல வருட விவாதங்களின் பின் எட்டப்பட்ட நீண்டகால மற்றும் ஆழமான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களை கத்தாரில் தாக்கிய சம்பவம் அரபு நாடுகளில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சவுதி – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்திய அரசியலில் புதிய அலைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சவுதி – பாகிஸ்தான் ஒப்பந்தம் இந்தியாவிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தனது எதிரியாகக் கருதும் இந்தியாவுடன் சிறிய அளவில் இராணுவ மோதலை நடத்தியது.
அதற்கு பின்னர் சவுதியுடன் இப்படியான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்தியா போலல்லாமல் துருக்கி, சீனா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவை பேணிவரும் பாகிஸ்தான், அவற்றிலிருந்தும் இராணுவ உதவிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றம், தென்னாசியாவில் புதிய பாதுகாப்பு சமநிலையைக் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.