சீனாவில் 90 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் மேற்கொண்டு வருகின்றனர். இது சீனாவின் 140 கோடி மக்கள்தொகையில் 64.3% வகிக்கிறது என்று அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உள்நாட்டு தேவையை விரிவுபடுத்துவதற்கும் உயர்தர பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் நுகர்வு ஒரு முக்கியமான உந்துசக்தியாக மாறியுள்ளது. சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள சீன இணைய வலையமைப்பு தகவல் மையம் வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, ஆன்லைன் ஷாப்பிங் பயனர்களில் கிட்டத்தட்ட 60% பேர் “சீன பாணி” தயாரிப்புகளை வாங்குகின்றனர். இதில் 66.5% பேர் உள்நாட்டு தயாரிப்புகளின் தரம் வெளிநாட்டு பிராண்டுகளை விட குறைந்ததல்ல என்று கருதுகின்றனர். இத்தகைய சீன பாணி பொருட்களை பிரபலமடைய செய்ய இணையம் உதவி வருகின்றது.இது சீனாவின் உற்பத்தித் தொழில் வேகமாக வளர்ந்து வருவதையும், கலாச்சார படைப்பாற்றல் அதிகரித்து வருவதையும் எடுத்துக்காட்டுவதாக சீன இணைய வலையமைப்பு தகவல் மையத்தின் இயக்குனர் லியு யூலின் தெரிவித்தார். இந்த அறிக்கையின்படி, கடந்த ஆறு மாதங்களில், ஆன்லைன் ஷாப்பிங் பயனர்களில் 25% பேர் ஆற்றல் சேமிப்புத் தயாரிப்புகளை வாங்கியுள்ளனர்.மேலும், 26.1% பேர் ஆரோக்கிய மற்றும் உடல்நல தயாரிப்புகளை வாங்கியுள்ளனர் மற்றும் 25% பேர் ஸ்மார்ட் வீட்டு உபயோக தயாரிப்புகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.