சீன செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் பிரதிநிதிகளின் 12வது மாநாட்டை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், இம்மாநாட்டுக்குக் கடிதத்தை அனுப்பி, நாட்டில் இச்சங்கத்தின் பரந்துபட்ட பணியாளர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்ததோடு, செஞ்சிலுவை பணி பற்றி அவர்களுக்கு கருத்தைத் தெரிவித்தார்.
அவர் இக்கடிதத்தில் கூறுகையில், மனித நேய துறையில், கட்சி மற்றும் அரசு, பொது மக்களுடன் தொடர்பு கொள்கின்ற பாலம் மற்றும் சங்கிலித்தொடராக, சீன செஞ்சிலுவை சங்கம் திகழ்கிறது.
புதிய யுகத்தில், இந்தச் சங்கம், கட்சியின் முழுமையான தலைமையில் ஊன்றி நின்று, உயர்தர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை மேலும் ஆழமாக்கி, சர்வதேச மனித நேய லட்சியத்தில் ஆக்கமுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும், சீன நவீனமயமாக்கத்தின் மூலம், வல்லரசின் கட்டுமானம், தேசத்தின் மறுமலர்ச்சி, மனித குலத்தின் அமைதி மற்றும் முன்னேற்ற லட்சியம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பல்வேறு நிலையிலான குழுக்களும், அரசுகளும், சீன செஞ்சிலுவை சங்கத்தின் பணிக்கான தலைமை மற்றும் ஆதரவை வலுப்படுத்தி, இச்சங்கம் சட்டப்படி கடமையை நிறைவேற்றுவதற்கு சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.